Mnadu News

2,000 ரூபாயை படிப்படியாக ரத்து செய்ய வேண்டும்: பாஜக எம்பி கோரிக்கை.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்று மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பாஜக எம்.பி. சுஷில் மோடி பேசினார். அப்போது, நாட்டில் உள்ள ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவை விரைவில் செல்லாது என அறிவிக்கக்கூடும் என்ற வதந்தி பரவி வருகின்றது. அதேபோல், 2,000 நோட்டு அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆவதால், மக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் புழக்கத்தை நிறுத்திவிட்டு 2,000 ரூபாய் நோட்டு கொண்டு வந்தது அர்த்தமற்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக மதிப்பிலான பணம் புழக்கத்தில் இல்லை.
அதுமட்டுமின்றி, 2,000 ரூபாய் நோட்டுகள் எளிதில் பதுக்கிவைத்து போதைப்பொருள், பணமோசடி போன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால், கறுப்பு பணத்திற்கு ஈடானதாக நாட்டின் அதிக மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டு மாறிவிட்டது.
எனவே, 2,000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை படிப்படியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பணத்தை மாற்றிக் கொள்ள மக்களுக்கு 2 ஆண்டுகள் காலவகாசம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒரே இரவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை பாஜக ஆளும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends