Mnadu News

90,000 டன் யூரியா இறக்குமதி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், ரசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
நடப்பாண்டில் பெய்த சாதகமான பருவமழையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு காலத்தே ரசாயன உரங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு மத்திய அரசிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதத்தில் 1,01,276 மெட்ரிக் டன் யூரியாவும், 14,263 மெட்ரிக் டன் டிஏபி உரமும், 15,472 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 68,248 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் ஆக மொத்தம் 1,99,259 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் வரப்பெற்றுள்ளன.
தமிழகத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவத்தில் இதுவரை 36.725 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், 6.4 இலட்சம் ஏக்கரில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்சமயம், அனைத்து வகைப்பயிர்களும் நன்கு வளர்ந்து, மேலுரமிடும் பருவத்தில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களை உரிய நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் வழங்குவதற்கு மத்திய அரசு மற்றும் கிரிப்கோ மற்றும் கொரமண்டல் போன்ற உர நிறுவனங்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் 90,000 மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு, காவேரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் ரயில் மற்றும் லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அரசு எடுத்த சீரிய நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 2022, நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 1,18,778 மெட்ரிக் டன் யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 30 தேதியின்படி, தமிழ்நாட்டில் 81,913 மெட்ரிக் டன் யூரியா, 33,629 மெட்ரிக் டன் டிஏபி, 32,296 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,59,049 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன.
எனவே, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் உரிய நேரத்தில் உரங்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதோடு, உர பதுக்கலை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பருவமழை பெய்து வருவதாலும், மேகமூட்டமாக இருப்பதாலும், தேவைக்கும் அதிகமாக உரமிட்டால், சாகுபடி செலவு உயர்வதுடன், பூச்சி, நோய் தாக்குதலும் அதிகமாகும் என்பதால், விவசாயிகள் பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this post with your friends