லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் இடம்பெற்ற எந்த நடிகருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் நடிகை ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை, சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் பட விழாவில் அறிவித்தார். இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கடைதிறப்பு விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாராய் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கும் தனக்கும் பல ஆண்டுகளாகவே நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது எப்போதுமே மிகவும் சிறப்பான தருணம் என்றும் பேசினார். மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் பெருமைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.