சேலம், ஐந்து ரோட்டில் குடிநீர் குழாயில் வால்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் லிட்டர் அளவுள்ள தண்ணீர் வீணாகி சாலையோரங்களில் வழிந்தோடுகிறது .மேட்டூரிலிருந்து சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உட்பட பல்வேறு நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், சேலம், ஐந்து ரோடு பகுதியில் வால்வு பொருத்தப்பட்டு, அதன் மூலம் மாநகரில், நான்கு மண்டலங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கும், குடிநீர் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இங்குள்ள குடிநீர் குழாய் வால்வில் ஏற்பட்ட கோளாறால் குடிநீர் வெளியேறி வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது.குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், வால்வை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.