திருப்பூர்மாவட்டம் பல்லடத்தையடுத்த பெத்தாம்பாளையம் கள்ளிமேடு பகுதியில் பயன்பாடற்ற பாறைக்குழி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிலர் அங்கு புதிதாக தோண்டி மூடப்பட்ட சிறிய மண் திட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மண் மேட்டில் இறந்தவர்களுக்கு படையல் வைப்பது போன்று பிஸ்கெட் பாக்கெட்டும் கிடந்ததால் குழந்தை புதைக்கப்பட்டிருக்கலாம் என பரபரப்பு தொற்றிக் கொண்டது.இதையடுத்து அப்பகுதியினர் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் சிறிய மண்மேட்டை தோண்டிப்பார்த்தனர்.
அப்போது அந்தக் குழிக்குள் வீட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்த வளர்ப்பு நாய் ஒன்றின் உடலை வளர்த்தவர்களே கொண்டு வந்து இங்கு புதைத்துள்ளதும் நாய்க்குப் பிடித்தமான பிஸ்க்கெட் பாக்கட்டை குழி மேட்டில் வைத்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.இதனால் ஏற்பட்ட பரபரப்பு விலகி போலீசாரும் பொதுமக்களும் நிம்மதியடைந்தனர்.