கடந்த வருடம், தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி , சர்கார், சாமி ஸ்கொயர், சாவித்ரியின் பயோபிக் மகாநடி என கீர்த்தி சுரேஷ் செம பிஸியாக இருந்தார். அதில், மகாநடி படத்திற்காக இவருக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்தார். இந்தப் படம், அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
மகாநடி வெற்றிக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தும் எதிலும் நடிக்க ஒப்பந்தமில்லாமல் இருந்த கீர்த்தி, போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வர, அதில் கமிட்டானார். இந்தப் படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான சையது அப்துல் இப்ராஹிம்மின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது.
‘பதாய் ஹோ’ பட இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இப்படத்திற்கு, ‘மெய்டான்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தவிர, தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் படமொன்றில் நடிக்கவிருக்கிறார், கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தகுந்தது.