புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் பகுதியை சேர்ந்த சிவா, பாபு சகோதரர்கள் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர், கிருஷ்ணா நகரை சேர்ந்த சாந்தமூர்த்தி என்ற ரவுடி நேற்று இரவு மாமூல் கேட்டு கடையில் மிரட்டி உள்ளார்.
மேலும் கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் கடையில் இருந்த ஊழியரை தாக்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 போலீசார் ரவுடி சாந்தமூர்த்தியை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிய ரௌடி அங்கிருந்து தப்பிச் சென்றான்.
இச்சம்பவம் தொடர்பாக மளிகை கடையின் உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ரவுடி சாந்தமூர்த்தியை தேடி வருகின்றனர். இதனிடையே மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை கைது செய்யக்கோரி இன்று வில்லியனூர் பகுதியில் வணிகர்கள் கடையடைப்பு செய்து வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட வணிகர்களுடன் காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை செய்து ரவடியை உடனடியாக கைது செய்யப்படும் என வாக்குறுதி அளித்த பின் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.