விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க கோரி, திமுக கொறடா சக்கரபாணி சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது விளையாட்டு வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும், 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்த வேண்டும் எனக் கூறினார். வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை வசம் பயன்படுத்தப்படாமல் உள்ள இடங்களை மாணவர்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திருப்பதே, மிகப்பெரும் சாதனை எனக் கூறினார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், 267 அரசு பள்ளிகளில், 5 ஏக்கருக்கும் அதிகமாக இடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களை பயன்படுத்தி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.