Mnadu News

திருப்பதி மலையில் பத்மாவதி பரிணயம் உற்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

புராண காலத்தில் ஏழுமலையானுக்கும் பத்மாவதி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் வெகு விமரிசையாக நடத்துகின்றது.

இந்த ஆண்டில் பத்மாவதி திருக்கல்யாண உற்சவம் திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் இன்று மாலை துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

பத்மாவதி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் உள்ள நாராயனகிரி பூந்தோட்டத்தில் உள்ள பத்மாவதி திருக்கல்யாண மண்டபத்தை நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் தேவஸ்தான நிர்வாகம் சிறப்பான முறையில் பக்தர்களின் மனதை கவரும் வகையில் அலங்கரித்துள்ளது.

இந்த நிலையில் திருக்கல்யாண உற்சவத்தின் முதல் நாளான இன்று ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி ராஜ அலங்காரத்தில் சர்வ திருவாபரணம் பூண்டு தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளி வடக்கு மாட வீதிகள் வழியாக நாராயணகிரி பூந்தோட்டத்தை ஊர்வலமாக சென்று அடைந்தார். தொடர்ந்து உபய தேவியர்களான ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவர்கள் பல்லக்கில் எழுந்தருளி வடக்கு மாட வீதி வழியாக நாராயணகிரி பூந்தோட்டத்தை சென்றடைந்தனர்.

அங்கு உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தூப, தீப, நைவேத்தியங்களுடன் கூடிய சிறப்பு சமர்ப்பணங்களுக்குப் பின் தேவஸ்தான அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி பத்மாவதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான உயர் அதிகாரிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு தரிசித்தனர்.தொடர்ந்து உற்சவர்கள் கோவில் மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்

Share this post with your friends