திருப்பத்தூர் அடுத்த உடையா முத்தூர் ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இதில் அண்ணா நகர், குள்ளன் ஊர், கட்டியானுர்,உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 3 மாதகாலமாக குடிநீர் வழங்கப்படவில்லை.இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் , இது குறித்து மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர் .
மேலும் இன்று காலை குடிநீர் வழங்குவதாக தெரிவித்த ஊராட்சி செயலாளர் இன்று காலையும் குடிநீர் வழங்காததால் சுமார் காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மின் மோட்டார் மற்றும் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.