தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகரில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் சேரும் குப்பைகளை பொதுமக்களே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து ஒரே இடத்திற்கு குப்பைகள் கொண்டு வரப்படாமல் தவிர்க்க 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்களுக்கு குப்பைகளை சேகரித்து வருவதற்கு ஏற்ப பேட்டரியில் இயங்கக்கூடிய வாகனங்களை புதிதாக வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி முதல்கட்டமாக 30 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த புதிய வாகனங்கள் முழுவதும் டீசல் பயன்பாட்டை தவிர்த்து புகை மாசு இல்லாமல் இருக்கும் வகையில் மின்சார சார்ஜ் மூலம் இயங்கக்கூடியவை. ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மின்சாரம் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 8 மணிநேரம் இயங்கக்கூடிய வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் எந்த அளவுக்கு வேகமாக செல்லுமோ அந்த அளவுக்கு இந்த வாகனங்களை வேகமாக இயக்க முடியும். இந்த வாகனத்தில் சுமார் 750 கிலோ எடையுள்ள குப்பைகளை எடுத்து செல்லலாம். ஸ்மார்ட்சிட்டி திட்ட நிதியில் இருந்து பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 30 வாகனங்கள் தற்போது வந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் 64 வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளது