வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாடு விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மாடு விடும் திருவிழா மாவட்டம் முழுவதும் நிறுத்தப்பட்டு இருந்தது .அதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டது. அதனை அடுத்து இன்று காட்பாடி அடுத்த பழைய காட்பாடி பகுதியில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் மாவட்ட முழுவதிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாடு கலந்து கொண்டு மாடு விடும் விழா நடைபெற்று வந்தது .இதனையடுத்து விழாக்குழுவினர் வருவாய் துறையினரிடமும் காவல் துறையினரிடமும் முறையான அனுமதி பெறாமல் மாடு விடும் திருவிழா நடத்தியதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இதனால், இந்த விழாவை காணவந்த பொதுமக்களும் இளைஞர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனை அடுத்து மாடு விடும் விழாவை போலீசார் நிறுத்தினர். மேலும் இந்த விழாவில் கலந்துகொண்ட மாட்டின் உரிமையாளர்கள் காட்பாடி காவல் ஆய்வாளர் புகழிடம் விழா குழுவினர் அனுமதி பெறாதது, தங்களுக்கு தெரியாது என்றும் இதில் முன் தொகை கட்டியுள்ளதாகவும் அதனை திரும்ப பெற்றுத்தரவேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் பரபரப்பும் ஏற்பட்டது .மேலும் இந்த விழாவை நடத்த முயன்றவர்களிடம் காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.