Mnadu News

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல கோடி முறைகேடு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் வெற்று சான்றிதழ் அச்சடிப்பு தொடர்பாக தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க, ஜி.எஸ்.டி லிமிடெட், மேட்ரிக்ஸ் இன்க் ஆகிய 2 நிறுவனங்களுடன் 11கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பில்; ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், பதிவாளர் மற்றும் கொள்முதல் குழுவால் செய்யப்பட வேண்டிய ஒப்பந்தத்தை, தேர்வு கட்டுப்பாட்டாளரே செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்கலில் ஏல மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, 7 லட்சத்து 33 ஆயிரத்து 722 பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டநிலையில், 20 லட்சத்து 92 ஆயிரத்து 722 பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதற்காக ஜி.எஸ்.டி லிமிட்டெட் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டது எனவும் செய்யாத பணிக்காக, மேட்ரிக்ஸ் இன்க் நிறுவனத்திற்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் வெற்றுச் சான்றிதழ்களை அச்சிடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐ.எப்.எப் லிமிடெட் நிறுவனம், ஜி.எஸ்.டி லிமிடெட் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தணிக்கைத்துறை அறிக்கை, அந்த நிறுவனம் 57 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிகளவிலான வெற்றுச் சான்றிதழ்களை கொள்முதல் செய்துள்ளதாகவும் இதில், சான்றிதழின் வடிவத்தை மாற்றியதால், 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சான்றிதழ்கள் பயன்படுத்த முடியாததாகிவிட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல், வெற்று சான்றிதழ்களை அச்சடிப்பது ஆகியவற்றில் 77 கோடிருபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends