Mnadu News

அதிமுக சாலை மறியலில் சிக்கிய அவசர ஊர்தி..!

சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்தும் அதிமுக கட்சியின் தற்காலிக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேச ராஜா தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது.

திடீரென அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வழியாக வந்த மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது. தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சரி செய்தனர். தங்கள் சொந்த கட்சி பிரச்சனைக்காக நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் செய்த இந்த சாலை மறியல் போராட்டம் பொதுமக்களிடையே முகம் சுளிக்க செய்தது.

Share this post with your friends