Mnadu News

அரசியலில் இருந்து மதத்தினை பிரிக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் கருத்து.

ஜம்முவில் கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குலாம் நபி ஆசாத், அனைவருக்கும் அவர்களது தரப்பு பார்வை மற்றும் கருத்தினை கூறுவதற்கு உரிமை உள்ளது. ஆனால், அவர்களது பார்வை மற்றும் கருத்து மக்களை ஒன்றினைக்க வேண்டுமே தவிர பிளவுபடுத்தக் கூடாது. மக்களை அரசியல் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிளவுப்படுத்தக் கூடாது. நாம் அரசியலில் இருந்து மதத்தினை பிரித்தெடுக்க வேண்டும். சில கட்சிகள் மற்றும் தலைவர்கள் சமுதாயத்தில் மக்களிடத்தில் பிரிவினையை உண்டாக்கி வருகின்றனர். அவர்களை நான் விமர்சிக்கவும், எதிர்க்கவும் செய்கிறேன். வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு அரசியலை ஒரு காரணமாக கூறக் கூடாது. கடந்த காலங்களிலும் தேர்தல் நடந்துள்ளது. ஆனால், இது போன்று சமுதாயத்தில் பிரிவினைகளை யாரும் விதைக்கவில்லை.
பிரிவினை வாசகங்களால் ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இனி ஒரு உயிர் இதுபோன்ற பிரிவினை வாசகங்களுக்கு பலியாகக் கூடாது. நான் ஜம்மு-காஷ்மீரில் இருந்தபோது பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் காப்பாற்றினர். அந்த இளைஞர்கள் பின்னர் தங்களது முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணித்தனர். ஆனால், தற்போது அந்த மாதிரியான சூழல் இல்லை. நீங்கள் இளைஞர்களை கொன்று கொண்டே செல்ல முடியாது. அப்படி செய்தால் நாம் அனைத்து இளைஞர்களையும் இழந்து விடுவோம். நமது குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சில நேரங்களில் நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள். அந்த சூழலில் நாம் அந்த குழந்தையினுடைய நண்பனிடமோ அல்லது ஆசிரியரிடமோ கூறி அந்த குழந்தைக்கு எடுத்துக் கூறி புரிய வைத்து அவர்களை நல்வழிப் படுத்துவோம் என்றார்.

Share this post with your friends