ஆன்லைன் சூதாட்டம் என்கிற வைரஸ் நாட்டையே உலுக்கி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பல தற்கொலை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படி தான் சென்னையில் வசிக்கும் ஒரு நபர் தன் குழந்தையை கொன்று தான் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரளுடன் சேர்த்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் சோகமான முடிவை எடுக்கும் அளவுக்கு இவரின் வாழ்வில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

2005 ஆம் ஆண்டு கீதா கிருஷ்ணனுக்கும் – கல்பனாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு குணாலினிஸ்ரீ, மானசா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கீதா கிருஷ்ணன் திருமணமான புதிதில் இருந்தே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தமது வாழ்வை தொலைத்துள்ளார். மேலும், பல நபர்களிடம் கண்மூடிதனமாக கடன் பெற்றுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் அன்றாடம் நெருக்கடி கொடுக்கவே கீதா கிருஷ்ணன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்து வந்துள்ளார்.

அந்த தருணத்தில் மனைவி கல்பனா, மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதை பார்த்து அதிர்ந்து போன கீதா கிருஷ்ணன், தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திருப்பதிக்கு தப்பித்து சென்றுள்ளார். அதன் பின்னர், மீண்டும் சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த அவர் மகள் மானசாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் கடன் தந்தவர்கள் நெருக்கடி தரவே, இன்னொரு நபரிடம் கடன் வாங்கி அவற்றை அடைத்துள்ளார். மேலும், அயனாவரம் பூஷணம் தெருவில் தான் தங்கி இருக்கும் சொந்த லீசுக்கு விட்டுவிட எண்ணிய அவர் ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவரிடம் லீஸ் அக்ரீமன்ட் போட்டு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டுள்ளார்.

ஆனால், சொன்னபடி வீட்டை லீசுக்கு விடாததால் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டு, கீதா கிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று இரவு லட்சுமிபதி சென்று கதவை தட்டி உள்ளார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப் படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

அப்போது, கீதா கிருஷ்ணன் மற்றும் மானசா இருவரும் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அயனாவரம் போலீசார் வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மியால் தந்தை மகள் மட்டுமல்லாமல், ஒரு குடும்பமே சிதைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
