Mnadu News

இசைப்புயல் திருவிழா! படங்களும்! இசைப்பயணமும்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் இயக்கிய “ரோஜா” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் வைத்தவர். தன் முதல் படத்திலேயே இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அற்புத இசை கலைஞர் ஆவார். பின்னர் அடுத்தடுத்து ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, காதலன், பம்பாய் என தொடர்ந்த இவரது இசைப் பயணம் 30 ஆண்டுகளை கடந்து இன்றைய ‘மாமன்னன்’ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளிலும் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்துள்ளார். இது தவிர கோல்டன் குளோப், பாஃப்டா , பல்வேறு படங்களுக்காக தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இதைக் கொண்டாடும் விதமாக, ஏ.ஆர்.ரஹ்மான் 5 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மெகா நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 12 ம் தேதி ECR-ல் நடைபெறவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சியில், பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இந்த கொண்டாட்டத்திற்கு ‘ARR திருவிழா’ என்று பெயரிட்டுள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த ARR திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை ஏஆர்ஆர் திரைப்பட விழா என்ற நிகழ்ச்சியையும் சென்னை மற்றும் கோவையில் நடத்துகின்றனர். இதில் சென்னையில் 5 திரையரங்குகளிலும், கோவையில் 2 திரையரங்குகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்த பதிவில் “30 ஆண்டுகால அன்பைக் கொண்டாடுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும், அருகிலும் தொலைவிலும் நான் பெற்ற அபாரமான அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி கூறுகிறேன். இந்தப் பயணம் முழுவதும் உங்கள் கருணையும், அரவணைப்பும் என் இதயத்தைத் தொட்டன. இன்னும் பல வருட நேசத்துக்குரிய நினைவுகள் இதோ ” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Share this post with your friends