Mnadu News

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றும், ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும் எனவும் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சுப்ரீம் நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் PET-CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதால் ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Share this post with your friends