Mnadu News

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம் விதிப்பு

கோவாவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. மும்பையில் விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள், ஓடுபாதைக்கு அருகில் விமானம் நிறுத்தப்படும் டார்மாக் பகுதியிலேயே அமர்ந்து உணவு உண்டனர். இந்த வீடியோ வைரலானது. விமான நிறுவனம் மீதும், மும்பை விமான நிலையம் மீதும் புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நிலைமை தொடர்பாக முன்னறிவிப்பு செய்வதிலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு தகுந்த வசதிகளை செய்வதிலும் மும்பை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் கவனத்துடன் செயல்படவில்லை என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் ரூ.1.2 கோடியும், மும்பை விமான நிலைய நிர்வாகம் ரூ.30 லட்சமும் அபராதமாக செலுத்தும்படி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தாமதம் தொடர்பான புகார்களில் சிக்கிய ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்களுக்கும் தலா ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends