ராணி எலிசபெத் மறைவால் மேலும் ஒரு வாரம் அரச குடும்பத்தினர் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னர் விருப்பம். அரச துக்கம், அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதையொட்டி அரச குடும்பத்தினர் எந்தவொரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியிலும் இன்னும் ஒரு வாரம் பங்கேற்க மாட்டார்கள். இதுவரை வெளியிடப்படாத ராணி எலிசபெத்தின் புகைப்படம் ஒன்றையும் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. இந்தப்படம் 1971-ம் ஆண்டு ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் எடுக்கப்பட்டதாகும். இந்தப்படத்தை அரச குடும்பம், “உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும், மாட்சிமை தங்கிய ராணியின் நினைவாக” என்ற வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ளது. “உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும்” என்ற வரிகள், ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ நாடகத்தில் வரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.