2022 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி அமெரிக்காவின் ஹொனலுலுவில் இருந்து பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் மசாசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கும் 33 வயதான இந்திய-அமெரிக்க மருத்துவர் சுதிப்தா மொஹந்தி பயணம் செய்து உள்ளார். அவரது இருக்கை அருகே 14 வயது சிறுமி ஒருவரும் பயணம் செய்து உள்ளார்.

அப்போது சிறுமி முன்பு மருத்துவர் ஆபாசமான செயலில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கபட்டதை தொடர்ந்து அமெரிக்க சிறப்பு விமான அதிகார வரம்பின் கீழ் அநாகரீகமான மற்றும் ஆபாசமான செயல்களுக்காக டாக்டர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த தகவல் பாஸ்டன் எப்பிஐ டுவிட்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாஸ்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் முதலில் ஆஜரானதைத் தொடர்ந்து நிபந்தனைகளின் அடிப்படையில் டாக்டர் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க வழக்கறிஞர் ஜோசுவா எஸ் லெவி கூறும் போது “ஒவ்வொருவருக்கும், குறிப்பாக குழந்தைகள், அவர்கள் பயணம் செய்யும் போது மோசமான நடத்தைக்கு ஆளாகாமல் இருக்க முழு உரிமை உண்டு என்று கூறி உள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், மருத்துவருக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், மேலும் ஒரு வருட கண்காணிப்பும், அபராதமும் விதிக்கப்படும்.