Mnadu News

இம்ரான் கான் தகுதி நீக்கம்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி.

பாகிஸ்தானில், கடந்த 2018 ஆம் ஆண்டு; நடந்த பொதுத் தேர்தலில், தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பின்னர் அவருக்கு எதிராக 24 எம்.பி.,க்கள் திடீரென போர்க்கொடி தூக்கியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இம்ரான் ஆட்சி கவிழ்ந்தது. அவரும் பதவி விலகினார்.
இந்நிலையில் இம்ரான் கான், தவறான பிரமாண பத்திரத்தை சமர்பித்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கானின் வழக்கறிஞர் அலி ஜாபர், 2018-19 இல் பரிசு பொருட்களை விற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரசு அதிகாரிகளால் பெறப்பட்ட பரிசுகள் தோஷகானாவில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும், அவற்றின் மதிப்பை மதிப்பிட வேண்டும். மதிப்பீட்டுக்கு பின்னரே குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்த பிறகு, பரிசு பொருட்களை விரும்பினால் எடுத்து செல்ல முடியும். ஆனால் இம்ரான் கான் பதவி விலகியதை அடுத்து கடந்த ஆகஸ்டில் அரசு கருவூலத்தில் இருந்து தோஷ்கானாவிற்கு பணம் செலுத்தாமல் சில பரிசு பொருட்களையும் எடுத்து சென்றுள்ளார்.
அவற்றின் விவரங்களையும் வெளியிட மறுத்துள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட அரசு பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாக இம்ரான் கானை பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends