உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேசும்போது புல்கித் ஆர்யா மற்றும் இளம்பெண் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புல்கித் இளம் பெண்ணை கொன்று அங்கிருந்த ஒரு கால்வாயில் வீசியுள்ளார். இதற்கு ரிசாட்டில் வேலை செய்யும் 2 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த இளம்பெண்ணை ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, மேலாளர் சௌரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கீத் குப்தா ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இளம் பெண்ணை கொலை செய்த 3 பேரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உத்திர பிரதேச மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இளம் பெண் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட ரிசார்ட்டை இடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி ரிசார்ட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் முதல்வர் புஷ்கர் தாமி மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ரிசார்ட்டுகளையும் ஆய்வு செய்து சட்ட விரோதமான முறையில் செயல்படும் ரிசார்ட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.