Mnadu News

உணவருந்தி கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்த மரக்கிளை!

திருவள்ளூர் அருகே பள்ளி வளாகத்தில் சாலையோர மரக்கிளை முறிந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவிகள் 8 பேர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியம், சிறுவானூர் கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வியாழக்கிழமை காலையில் வழக்கம் போல் செயல்பட்டது.

இந்த நிலையில், மாணவர்கள் மதிய உணவு நேரத்தில் பள்ளி வளாகம் முன்பு வெளியே வந்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர் சுகுணா உணவு வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அருகிலிருந்த ஆலமரம் மழை ஈரத்தில் நனைந்து இருந்ததால் சாய்ந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயந்தி, நிஷா, பிரியா, சாதனா, சந்தனா, சஞ்சனா, சாந்தி, சர்வேஸ்வரன், சாய் விமல் ராஜ் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் மற்ற மாணவ, மாணவிகள் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு பணியிலிருந்த ஆசிரியர்கள் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் லேசான காயம் அடைந்த மாணவ, மாணவிகள் சிகிச்சைக்கு பின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends