Mnadu News

உத்தரகாண்டில் நிலச்சரிவால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்..!

உத்தரகாண்டில் தொடர் கனமழை பெய்து வருகிறது. புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை, மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டு, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்லும் முக்கிய சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் உள்ளூர் மக்களுடன் குறைந்தது 40 பக்தர்களும், தவாகாட் பகுதிக்கு அருகே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தவாகத் – லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மலையின் பாறைகள் உடைந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால், ஆதி கைலாஷ் யாத்திரைக்கு செல்லும் முக்கிய பாதைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, பல்வேறு நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. ஹெல்குகாட் மற்றும் ஸ்வரிகாட் அருகே மலைகளில் இருந்து விழுந்த பாறைகள் மற்றும் கற்பாறைகளால் ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தலைநகர் டேராடூனில் உள்ள விகாஸ்நகர்-கல்சி-பர்கோட் தேசிய நெடுஞ்சாலையும் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது என மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. டேராடூனில் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரபானி சோய்லா, சிம்லா பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Share this post with your friends