Mnadu News

உத்தரபிரதேசத்தில் செல்போன் வெடித்து சிதறல்! உயிர் தப்பிய நபர்!

உத்திரபிரதேசத்தில் அலிகாரை சேர்ந்தவர் 47 வயதான தொழிலதிபர் பிரேம் ராஜ் சிங். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சிறந்த நிறுவனம் எனக் கூறப்படும் செல்போன் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். தனது பாக்கெட்டில் வைத்திருந்தபோது செல்போன் சூடாவதை உணர்ந்த பிரேம் ராஜ், அதனை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக செல்போனில் இருந்து புகையும் வெளிவரத் தொடங்கியதோடு, இரண்டு துண்டுகளாக வெடித்து சிதறியுள்ளது.

இதுகுறித்து பிரேம் ராஜ், “நான் செல்போனை எனது பாக்கெட்டில் வைத்திருந்தேன். திடீரென அது பயங்கர சத்தத்துடன் வெடித்து இரண்டு துண்டுகளாக சிதறியது” என்று அதிர்ச்சியுடன் கூறினார். எதிர்பாராத இந்த நிகழ்வால் பிரேம் ராஜின் இடது கட்டை விரல் மற்றும் தொடைப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பிரேம் சிங் உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் செல்போன் தயாரிப்பு நிறுவனம் மீது மகுவா கெரா காவல் நிலையத்தில் பிரேம் ராஜ் நேற்று புகார் அளித்தார். தான் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நீண்ட ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல் முறை என்றும் குறிப்பிட்ட அவர், இந்த சம்பவத்திற்கு அந்த செல்போன் தயாரிப்பு நிறுவனம் மீதான நம்பிக்கை போய்விட்டதாகவும் குற்றம்சாட்டினார். பெரிய பாதிப்பு எதுவுமில்லாமல் தப்பித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த காவல் துறை அதிகாரி விஜய் சிங், விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செல்போன் வெடிப்பு சம்பவம் நடப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே இது போன்று பல நிகழ்வுகள் அரங்கேறி நாடெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.

Share this post with your friends