இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை இந்தோனேசிய பிரதமர் ஜோகோ விடோடோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையும் தான் தீர்வு. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் பேரழிவுகளை ஏற்படுத்தியது. அப்போதைய் உலகத் தலைவர்கள் அமைதிக்கு திரும்புதலுக்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். இப்போது இது நமது நேரம். நமக்கான வாய்ப்பு. உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
சுத்தமான எரிசக்தி, சுத்தமான சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது. ஏனெனில் இந்தியா இப்போது வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கிறது. ஆகையால் இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதைத் தடுக்கும், எரிசக்தி ஸ்திரத்தன்மையை அசைக்கும் எவ்வித தடைகளையும் ஊக்குவிக்கக் கூடாது.
உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவதே இந்த தருணத்தின் தேவை. அடுத்த ஆண்டு புத்தரும், காந்தியும் பிறந்த மண்ணில் நாம் அனைவரும் ஜி20 மாநாட்டிற்காக கூடும்போது நாம் உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கடத்துவோம் என்று நம்புகிறேன்” என்று பேசி உள்ளார்.