Mnadu News

எண்ணூர் பகுதியில் 20 ச.கி.மீ அளவில் பரவிய கச்சா எண்ணெய்!

மிக்ஜாம் புயலின் போது சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் சென்னையை ஒட்டிய 20 சதுர கிலோ மீட்டர் கடல் பகுதியில் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை அருகே உள்ள சிபிசிஎல் ஆலையிலிருந்து மிக்ஜாம் புயலின்போது கச்சா எண்ணெய் வெளியேறியது. இந்த எண்ணெய் எண்ணூர் பகுதியில் கடலில் கலந்து வரும் நிலையில் சுற்றுச்சூழலுக்கும், மீன் வளத்திற்கும் பெரிய ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

கச்சா எண்ணெய் கலந்த நீரால் பொது மக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகினர். இந்நிலையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம், கச்சா எண்ணெய் பரவிய கடல் பகுதி மீது பரந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கடலோர காவல்படை கப்பல் மூலம் எண்ணெயை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர நிலப்பகுதிகளில் பரவியுள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உதவ கடலோர காவல்படையின் நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

Share this post with your friends