தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்துவரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்கள், வயல்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 307 புள்ளி 9 மில்லி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 325 புள்ளி 80 மில்லி மீட்டர் மழை, பதிவானது. இருப்பினும், மழை ஓய்ந்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடானது. கடலூர் நகர் பகுதியான பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், குண்டுஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. விருத்தாசலம் அருகே உள்ள கவணை கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 118 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது.
வயலூர் அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் மழை நீர் மணிமுக்தாறுக்குச் செல்ல வழியின்றி வயல்களில் தேங்கியது
,என்எல்சி சுரங்கத்தில் தேங்கிய மழை நீரை இரவு நேரத்தில் மின் மோட்டார் மூலம் வெளியேற்றியதால் அரங்கமங்கலம், கல்குணம், அயன்குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் வயல்கள் நீரில் மூழ்கின. சிதம்பரம் அருகே உள்ள சித்தோடை வாய்க்கால் ஷட்டர் திறக்கப்படாததால் பாசிமுத்தான் ஓடை பாசனப் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் நீரில் மூழ்கியது.
விருத்தாசலம் அருகே செம்பாளக்குறிச்சி ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகளவில் மழை நீர் தேங்கியது. இதனால் செம்பாளக்குறிச்சி, சித்தேரிக்குப்பம், கவணை, சின்னபண்டாரம் உள்ளிட்ட கிராம மக்கள் சின்னவடவாடி வழியாகச் சுற்றி விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலைக்கு செல்கின்றனர்.
செம்பாளக்குறிச்சி பகுதியில் விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள மாரி ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலையில் அதிகளவு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஆலடி சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
பலத்த மழைக்கு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 242 வீடுகள் மழைக்கு இடிந்தது. அதோடு, 30 பசுமாடுகளும், 37 ஆடுகள் உள்ளிட்ட 108 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னையில் வெள்ள சேதங்களை முதல் அமைச்சர் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, கடலூர், சீர்காழி பகுதிகளில் வெள்ள சேதங்களை இன்று ஆய்வு செய்வதாக அறிவித்தார். இதற்காக முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்தார். பின்னர் அங்கு தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.
இன்று காலை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழ்வாணிக்குப்பம், வல்லம்படுகை பகுதியில் வெள்ள சேதங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல் அமைச்சர் பார்வையிட்டார்.
கனமழை காரணாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மழையால் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த 1 பயனாளிக்கும் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.