தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்ட கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் பயின்ற பள்ளியை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மறைந்த கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன் நினைவாக அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும், கோவில்பட்டியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் தெரிவித்திருந்தார் .

அந்த வகையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் அவர் பயின்ற பள்ளி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் புனரமைக்கப்பட்ட பள்ளியை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதை தொடர்ந்து இடைசெவல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சரவணன் கல்வெட்டை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.