வேலை தேடும் இளைஞர்:
வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் 23 வயதான சீனு. இவர், படித்துவிட்டு பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனுவுக்கு பக்கத்து வீட்டு நபரின் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
கள்ள உறவு :
இந்த உறவு குறித்து பக்கத்து வீட்டு பெண்ணின் கணவருக்கு தெரியவே இருவருக்கும் இடையில் அவ்வப்போது தகராறு வெடித்து உள்ளது. அதே போல, சீனு உடனான கள்ள உறவு குறித்து அப்பெண் தனது சகோதரி மகன் பிரவீன்குமாரிடம் தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளார்.
பெண்ணின் தம்பியின் சதி திட்டம்:
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பிரவீன் சீனுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி உள்ளார். இந்த நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த சீனுவுக்கு புதிய பணி குறித்த வாய்ப்பு கிடைக்கவே, அது பிரவீனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் விரைந்து தீர்த்து கட்ட முடிவு செய்து நேற்று நள்ளிரவு கடுமையான போதையில் சீனுவின் வீட்டு கதவை தட்டி உள்ளார்.
கொலை :
பின்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சீனுவை மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன்குமார் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சீனு ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காப்பாற்றுமாறு கதறி துடித்தபடி அப்பெண்ணின் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். ஆனாலும் பாதி வழியிலேயே சீனு துடிதுடித்து பரிதாபமாக கீழே விழுந்து பலியானார்.
வழக்கு பதிவு & கைது:
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வேலக்கவுண்டன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனுவின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ள உறவால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.