Mnadu News

காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் களம் கண்டனர். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9 ஆயிரத்து 915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 96 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.அதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் சசி தரூர் ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். 416 வாக்குகள் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது கௌரவம், பெரிய பொறுப்பு என்றும் அந்த பணியில் ஈடுபடவுள்ள கார்கேவுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends