Mnadu News

காஞ்சி மண்ணில் முளைத்த வைரம்!நா.முத்துக்குமார் பிறந்த நாள் இன்று! 

நா.முத்துக்குமார் : 

தமிழ் சினிமா வரலாற்றில் விரல் விட்டு எண்ணும் பாடலாசிரியர்கள் மட்டுமே காலங்கள் தாண்டியும் மனதில் நிலைத்து நிற்பார்கள். பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து இவர்களுக்கு பிறகு இன்றளவும் மக்கள் உள்ளங்களில் ஆழமான தாக்கத்தை தனது வரிகளால் நிரம்பி இருப்பவர் நா.முத்துக்குமார். 

90 களின் இறுதியில் “வீரநடை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த கவிஞர் நா.முத்துக்குமார். கவிஞர் அறிவுமதியின் பட்டறையில் இருந்து வந்த காஞ்சி மண்ணில் முளைத்த வைரம். கவிஞர், பாடலாசிரியர், முனைவர், கட்டுரையாளர் என பண்முகங்கள் இவருக்கு உண்டு. 

மாஸ் & கிளாஸ் வரிகளின் சொந்தக்காரர்: 

வீரநடை படம் கொடுத்த மகத்தான அறிமுகம் மற்றும் கவிஞர் அறிவுமதி கூடத்தில் எடுத்த பயிற்சி, பாலுமகேந்திராவின் வழி காட்டுதல், புத்தக வாசிப்பு போன்றவை அவரை ஒரு கை தேர்ந்த பாடலாசிரியராக பட்டை தீட்டியது. அதன் பின்னர் வந்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்குமாரை தனித்த பாடலாசிரியராக அடையாளம் காட்டியது. 

ஆம், “ரன்” படத்தில் வந்த ” தேரடி வீதியில்” போன்ற மாஸ் பாடலாக இருந்தாலும் சரி, “டும் டும் டும்” படத்தில் இடம் பெற்ற “ரகசியமாய்” போன்ற கிளாஸ் பாடலாக இருந்தாலும் சரி இரண்டையும் கொடுப்பதில் கை தேர்ந்தவர் இவர். 

டாப் கம்போசர்கள் இசையில் நா.மு : 

இவரின் பாடல் பயணத்தில் இந்திய சினிமாவின் இசை மாமேதைகளின் இசையில் இவரின் வரிகள் இடம் பிடித்து இவரை இன்னும் புகழின் உச்சியில் அமர்த்தியது. ஆம், இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ் குமார் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 

யுவன் , ஜிவியின் ஆஸ்தான பாடலாசிரியர்: 

முத்துக்குமார் பாடல் எழுத ஆரம்பித்ததில் இருந்தே யுவன், ஜி வி இருவரும் தொடர்ச்சியாக இவரை அவர்களின் அனைத்து படங்களிலும் பயன்படுத்தி கொண்டனர். ஆம், இவர்கள் காம்போ இணைந்தாலே அது நிச்சயம் ஹிட் பாடல் தான். 

தேசிய விருதுகள் : 

பாடல் எழுத ஆரம்பித்து 12 வருடங்கள் கழித்து இவருக்கு “தங்க மீன்கள்” திரைப்படத்துக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. ஆம், “ஆனந்த யாழை” பாடல் பட்டி தொட்டி எங்கும் பலரின் இதயங்களை உணர்ச்சியில் பிசைந்தது. அதன் பிறகு மீண்டும் 2014 ஆம் ஆண்டு “சைவம்” படத்தில் இடம் பெற்ற “அழகே அழகே” பாடல் இன்னொரு தேசிய விருதை அவருக்கு பெற்று தந்தது. அதோடு பல வருடங்களாக தொடர்ச்சியாக வருடத்துக்கு 100 க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதிய பாடலாசிரியர் என்கிற பெருமையும் இவரையே சாரும். 

தீடீர் மறைவு : 

2015 ஆம் ஆண்டு முதல் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டு சரியாக அவரின் இரண்டாவது குழந்தை பிறந்த சில மாதங்களில் அவர் காலமானார். 

மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் உள்ளங்களில் இவரின் பாடல்கள் இன்றும் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும்.  இன்று தமது 48 வது பிறந்த நாளை வானில் கொண்டாடி கொண்டிருக்கும் கவிஞர் முனைவர் நா.முத்துக்குமாருக்கு எம் நாடு தொலைக்காட்சி சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கொள்கிறோம். 

Share this post with your friends