Mnadu News

குஜராத்தின் இரு ஆட்சியர்களுக்கு குடியுரிமை வழங்க அதிகாரம்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளான ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பாhசி சமூகத்தினர் ஆகிய சிறுபான்மையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் நோக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றியது.
எனினும், அத்திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை. அதன் காரணமாக புதிய சட்டத்தின் கீழ் இன்னும் எவருக்கும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை சட்டத்தின் (1955) கீழ் குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரத்தை குஜராத்தின் ஆனந்த், மேசனா மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
மேற்கண்ட நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஆனந்த், மேசனா மாவட்டங்களில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சமூகத்தினர் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இணையவழியிலான அந்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவார்; என்று அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post with your friends