Mnadu News

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 142 ஆனது.

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோhபி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.
கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த 26 ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தப் பாலத்தில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது, 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5 முதல் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.” காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முப்படைகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோர்பி சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோர்பி சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்
தற்போது குஜராத்தில் உள்ள பிரதமர் ,நரேந்திர மோடி , விபத்து தொடர்பாக மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. விபத்து நடைபெற்ற இடத்துக்கு மீட்புக் குழுக்களை விரைந்து அனுப்பவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் பிரதமர் கேட்டுக்கொண்டதாக அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு கவலை தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சிங்வியுடன் பேசியதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Share this post with your friends