Mnadu News

குட்கா தடை ரத்துக்கு எதிரான வழக்கு: குட்கா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.அந்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, வழக்கில் பதிலளிக்க குட்கா, பான் மசாலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இது தவிர, இந்த விவகாரத்தில் ஆண்டுதோறும் அத்துறையால் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆணையரின் உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதேபோன்று, ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வேறு சில வழக்குகளும் தொடுக்கப்பட்டன.இந்த வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், “அவசரநிலை கருதியும், பொதுநலன் கருதியும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன’ என தீர்ப்பு அளித்திருந்தது.இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி தயாரித்து, அதை தமிழக அரசின் வழக்குரைஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

Share this post with your friends