குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ஈவிபி டவுன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் – ஜெய்பார்வதி தம்பதி. இவர்கள் இருவரும் மகன் சக்திவேலுடன் வசித்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாகவும், வீட்டில் பெற்றோர் மட்டும் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னர், சக்திவேல் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தந்தை கணேசன் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்த நிலையிலும், தாய் ஜெய்பார்வதி நாக்கை கடித்தபடியும் இறந்து கிடப்பதை கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார் அலறி உள்ளார்.
இதுகுறித்து அவர் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் மகன் சக்திவேலிடம் நடத்திய விசாரணையில் வீட்டிற்கு இரண்டு சாவிகள் இருப்பதாகவும், காலையில் சக்திவேல் வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், வீட்டுக்குள் தாய்-தந்தை இறந்து கிடந்ததாக தெரிவித்தார். மேலும் இதை மர்ம மரண வழக்காக பதிவு செய்துள்ள போலீசார், மகனே தாய் தந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடுகிறாரா ? அல்லது வேறு ஏதேனும் மர்ம நபர்கள் இந்த கொலையை செய்தார்களா? போன்ற பல கோணங்களில் விசாரணையை தீவிரமாக்கி உள்ளனர்.