Mnadu News

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்து. அங்கு அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 12 புள்ளி 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்துள்ளது. கடனா அணை நீர்மட்டம் 70 அடியையும், ராமநதி அணை நீர்மட்டம் 71 அடியையும் எட்டி உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதியில் 51 புள்ளி 84 அடிநீர் இருப்பு உள்ளது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் முழுவதும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலையிலும் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீரின் ஆக்ரோஷம் குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை முதல் தென்காசி பகுதியில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டுள்ளது. மாலை நேரம் போல அப்பகுதி காட்சியளிக்கிறது.

Share this post with your friends