Mnadu News

கேலிக்கு உள்ளாகும் ப்ராஜக்ட் கே போஸ்டர்!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அவர் நடித்த பாகுபலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து அவர் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்கள் அனைத்து பான் இந்தியா படங்களாகவே உருவாக்கப்பட்டன. பாகுபலிக்கு பின் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்தன. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என கடைசியாக அவர் நடித்த மூன்று பெரிய பட்ஜெட் படங்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 

இதனால் கட்டாய வெற்றியை பெற வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளார் பிரபாஸ். இவர் தற்போது மலைபோல் நம்பியுள்ள படம் தான் “புராஜெக்ட் கே”. தேசிய விருது வென்ற மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் புராஜெக்ட் கே படத்தை இயக்கி உள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே தேர்வாகி உள்ளனர். 

அதன்படி இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்கும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு சுமார் ₹100 கோடிக்கு மேல் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்கிறார்.

புராஜெக்ட் கே என்றால் என்ன என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. அதற்கான விடை வருகிற ஜூலை 21 ஆம் தேதி தெரியவரும். அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் மாநாட்டில் புராஜெக்ட் கே என்றால் என்ன என்பதை விவரிக்கும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட உள்ளனர். இதற்காக பிரபாஸ், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்நிலையில், தற்போது சர்ப்ரைஸாக புராஜெக்ட் கே படத்தின் நாயகன் பிரபாஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த போஸ்டரை பார்த்த பலரும் அதை கிண்டலடித்து மீம்ஸ் இட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படமாவது பிரபாசுக்கு கை கொடுக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

Share this post with your friends