கோவையில் நாளை நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை கோவை விமான நிலையத்திற்கு வருகை புரியும் பிரதமக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து மாலை கோவை சாய்பாபா காலனியில் வாகன பிரசாரத்தை தொடங்குகிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேரை பா.ஜ.க.வினர் திரட்ட உள்ளனர்.
இதனை ஒட்டி, கோவை மாநகரம் முழுவதும் காவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.