Mnadu News

சட்டவிரோத புலம்பெயர்வோரை நாடு கடத்துங்கள்: உளவு துறைக்கு அமித்ஷா உத்தரவு.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்கும் பணியில் மத்திய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ரகசிய இடத்தில் நாடு முழுவதும் உள்ள உளவுத்துறை (ஐபி) அதிகாரிகளின் உயர்நிலைக்குழு கூட்டம் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு சூழல், பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதியளித்தல், போதைப்பொருள் பயங்கரவாதம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை (ஐபி) இயக்குநர் தபன் டேகா மற்றும் நாடு முழுவதும் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த நிலையில், அனைத்து மாநில உளவு துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டவிரோத புலம்பெயர்வோர் 100 பேரை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்து, பின்பு அவர்களை நாடு கடத்துங்கள். அவர்களிடம் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்வோர் என்பதற்காக அண்டை நாடுகள் ஏற்க மறுத்த போதிலும் தொடர்ந்து இந்த பணியை மேற்கொள்ளுங்கள் என உளவு துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ள, ஆவணம் இல்லாமல் எல்லை மாநிலங்களில் புலம்பெயரும் நபர்கள் மீது அமைச்சர் அமித்ஷா கடுமை காட்டுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆகஸ்டு 17-18 ஆகிய நாட்களில் உளவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஜி.பி.க்களுக்கு, எல்லை மாவட்ட பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தீவிரமுடன் கண்காணிக்கும்படியும், இதுபோன்ற புலம்பெயர்வோரையும் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். சீக்கியர்கள், கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு ஆளாவது அதிகரிப்பது பற்றியும் கண்காணிக்கும்படி கடந்த 9-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் அதிகாரிகளை அவர் கேட்டு கொண்டார். நாட்டின் அமைதியை பேணுவதில் முக்கிய பங்காற்றும் உளவு துறை அதிகாரிகள், தங்களை அடையாளப்படுத்தி கொள்ளாமல், எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி, நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த பணியை செய்து வருகின்றனர் என பெருமையுடன் அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More