Mnadu News

சத்யாவுக்கு நடந்த துயரத்தால் நொறுங்கி உள்ளேன்: முதல் அமைச்சர் ஸ்டாலின் வேதனை.

சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் nரையாற்றிய முதல் அமைச்சர்; ஸ்டாலின் , இன்றைக்கு வேலையின்மை மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. வேலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கக்கூடிய இளைஞருடைய அந்த நிலைமை மிகவும் ஒரு மோசமான நிலை தான். அது வருத்தப்படக்கூடிய ஒரு நிலைதான். அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா என்ற ஒரு கொடிய தொற்று, நம்முடைய தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும், அது அச்சுறுத்திய காரணத்தினால், அந்த கொடுமை இருந்த காரணத்தினால், எங்கேயும் புதிய வேலை வாய்ப்புகளுக்கு ஒரு சவாலான காலமாக அமைந்திருந்தது.
அத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் தான் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது. அப்படி அமைந்த நேரத்தில் பார்த்தீர்கள் என்று சொன்னால், நாங்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிகள் எல்லாம் உடனடியாக காப்பாற்றக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. ஒரு அச்சம் ஏற்பட்டது, ஒரு பயம் ஏற்பட்டது, இதையெல்லாம் எப்படி செய்யப்போகிறோம்? எந்த நேரத்தில் என்ன நடக்கும், எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தம், ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைகளில் இடம் இல்லை. அப்படிபட்ட ஒரு கொடுமையான சூழ்நிலை அமைந்தது.
அப்போது பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தக் கொரோனாவை தடுக்கின்ற அந்தக் கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்றுகின்ற அந்தப் பணியில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோம். ஆனால், கொரோனாவையே காரணமாக வைத்து வேலையின்மை பிரச்னையை கண்டும் காணாமல் திமுக அரசு விட்டுவிடவில்லை. நம்முடைய ஆட்சி அதை கண்டும் காணாமல் இருந்துவிடவில்லை. ஒரு லட்சம் பேருக்கு இந்த ஓராண்டு காலத்தில் வேலை வாய்ப்பை இன்றைக்கு நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம். இது ஒரு மிகப் பெரிய சாதனை என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயத்தில் இந்தத் தருணத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை சொல்கிறபோது கொஞ்சம் வேதனையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன். என்னவென்றால், இரண்டு நாளைக்கு முன்னால், சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, அதைப் படித்த, அறிந்த அத்தனை பேர்களுமே, நீங்கள் எல்லாம் துக்கத்தில் இருந்திருப்பீர்கள், துயரத்தை அடைந்திருப்பீர்கள். இது போன்ற சம்பவங்கள், இனி தமிழகத்தில் நிகழக்கூடாது, இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம்.
இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோல, நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்க மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். பாடப் புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வி அவசியமானது. தன்னைப்போலவே, பிற உயிரையும், மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக, அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். அவர்கள் எந்தவகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது.
இயற்கையில், ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக்கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோர்களும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்க அவர்களை எல்லாம் வளர்க்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்று அவர் உரையாற்றினார்.

Share this post with your friends