இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு சீனா மற்றும் இந்தியாவிற்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஜப்பானின் நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ‘இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். .
சீனா, இந்தியா மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு சிறிலங்கா தனது சொந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அத்தகைய முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜப்பான் தனது பங்கைச் செய்யும்” எனவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கடனாளி நாடுகள், கடனை பெற்றுக்கொள்வதற்கான சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.