Mnadu News

சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு தகவல்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில், அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற இல்ல வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், அவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அவை தலைவர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான சுதீப் பந்தோபாத்யாய், சுகேந்து சேகர், டி.ஆர்.எஸ். தலைவர்களான கேசவ ராவ், நாம நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எனினும், கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதுபற்றி அரசு கூறும்போது, பாரத் ஜோடோ யாத்திரையில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதனால், அவர்கள் வரஇயலவில்லை என கூறியுள்ளது. கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 27 கட்சிகளை சேர்ந்த 37 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டம் நன்றாக நடந்தது. அவை நல்ல முறையில் நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டேன். அனைத்து விவகாரங்கள் பற்றியும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என கூறினார். இன்றைய கூட்டத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், எல்லையில் சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கோரினர். எனினும், பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் என்பதனால், அதுபற்றி நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என மத்திய அரசு பதிலளித்து உள்ளது.

Share this post with your friends