நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே 3 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் 4-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இதையடுத்து, நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூரு இடையே வருகிற நவம்பர மாதம்; 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவிருக்கிறார்.
சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும். இதன் மூலமாக, சென்னையில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.