இயக்குனர் அட்லி தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று பிளாக் பஸ்டர் படங்களைத் தந்தவர். தற்போது பாலிவுட் பாட்சா ஷாருக்கான் உடன் இணைந்து “ஜவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இப்படத்தின் இசை உரிமத்தை T-SERIES நிறுவனம் 36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஷாருக்கான் அறிமுகமாகும் ‘ஜிந்தா பந்தா’ என்ற பாடலில் அவர் 1,000 பெண் நடனக் கலைஞர்களுடன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் நடனமாட சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டதாகவும் 5 நாள்கள் படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு 15 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.