அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான ஜெயலலிதா மரணமும் அதற்கு முன்பு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தன. அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில், பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்காமல், கேள்விகளாகவே முடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான முழுமையாக விளக்கம் அளிக்கப்படவில்லை என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவை குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும், சசிகலா மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளது. இது ஒன்று மட்டுமே இப்போதைக்கு விசாரணை ஆணையம் கொடுத்த ஒரு பதிலாகக் கருதப்படுகிறது.
ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் உறவினர் ஒருவரால், அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவர் சமீன் சர்மாவை ஏற்பாடு செய்தவர் யார் என்பது தெரியவரவில்லை. அப்படியே, ஜெயலலிதாவை பரிசோதித்த மருத்துவர் சமீன் சர்மா, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்திருந்தார். ஆனால் அது கடைசி வரை செய்யப்படவில்லை. அது ஏன் என்று தெரிவிக்கப்படவில்லைடி.
2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் சுமூகமாக உறவு இருந்திருக்கவில்லை.
,எய்ம்ஸ் மருத்துவக் குழு 3 முறை அப்போல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தாலும், அவர்கள் ஜெயலலிதாவுக்கு முறைப்படி ஒரு முறை கூட சிகிச்சை அளிக்கவில்லை.
2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.
சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
,இறுதியாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவக்குமார், அப்போது சுகாதாரத் துறை துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.