Mnadu News

ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு! மும்பை பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்கள்! நடந்தது என்ன?

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பணம் பறிக்கும் கும்பல் எப்போதும் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. எப்படியாவது நாம் படத்தில் அதுவும் முக்கிய படத்தில் முக்கிய ரோலில் என்ற நப்பாசையில் பலரும் பலதை இழந்து வரும் செய்திகள் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தான் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் பெயரில் அரங்கேறி உள்ளது.

மும்பையை சேர்ந்தவர் நிலேஷா என்ற 21 வயது பெண். அப்பெண்ணிடம் பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற இரண்டு மர்ம நபர்கள் அணுகி, நாங்கள் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் என கூறி நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர், ஆர்சி-15 ஆகிய படங்கள் தயாரிக்க உள்ளோம் என்றும், இப்படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிலும் ஹைலைட் என்னவென்றால் ரஜினிகாந்த் மகள் வேடத்தில் அல்லது சைபர் ஹேக்கர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்து அந்த பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதே போல படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அப்பெண்ணிடம் சில பல போலி ஆவணங்களையும் கொடுத்து நம்ப வைத்துள்ளனர்.

இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவே. விஷயம் இன்னும் இவர்களுக்கு சுலபம் ஆகியுள்ளது. அதோடு பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக சிறிது பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி அப்பெண்ணிடம் கொஞ்சம் கொஞ்சமாக ₹10 லட்சத்தை நைசாக வாங்கி உள்ளனர். பணம் கிடைத்த சூட்டில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அதன் பிறகு, அவர்களை அப்பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மும்பை தகிசர் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இருக்கும் கம்பெனி பெயரை பயன்படுத்தி இரண்டு பேரும் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தனிப்படை அமைத்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends