Mnadu News

ஞானவாபி மசூதி விவகாரம்: கார்பன் ஆய்வு கோரிக்கை நிராகரிப்பு.

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலையடுத்து ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் கோயிலின் ஒருபகுதியை இடித்துவிட்டே மசூதி கட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சில ஹிந்து பெண்கள், மசூதியின் பக்கவாட்டுச் சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களின் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தொடர்பாக முறையீடு, மேல் முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இருபதாண்டு அனுபவம் மிக்க மாவட்ட நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்காக கார்பன் ஆய்வு முறையை நடத்த அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஏ.கே.விசேஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, கார்பன் ஆய்வு குறித்த கோரிக்கை மீதான கருத்தை ஞானவாபி மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இந்தேஜமியா மஸ்ஜித் குழு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதன்பின், இன்று இந்த மனுவை விசாரித்த வாராணசி நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விசேஷா ஞானவாபி மசூதியில் ‘கார்பன்’ ஆய்வு நடத்தும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றதுடன் இதுசார்பான மனுவை நிராகரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

Share this post with your friends