Mnadu News

தமிழகத்தில் இன்று அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. தங்கள் கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய கட்சி தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லை வருகிறார்.

அவர் இந்தியா கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 8 தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதைதொடர்ந்து மாலை 6.15 மணிக்கு ராகுல் காந்தி கோவை செல்கிறார். அங்கு இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் ராகுல்காந்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்கிறார்கள்.

அப்போது ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் தி..மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) ஆகியோரை ஆதரித்து வாக்கு கேட்டு பேசுகிறார்கள்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மதுரைக்கு வருகிறார். மாலை 6.15 மணி அளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது.

அந்த பேரணி, ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீன மடம் அருகே நிறைவடைகிறது. பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் அமித்ஷா ஈடுபடுகிறார். பின்னர் அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் அமித்ஷா ஈடுபடுகிறார்.

மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 9 மணிக்கு பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு காலை 9.45 மணிக்கு வருகிறார்.

அங்கு, கிருஷ்ணகிரி பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

அதன்பிறகு, ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்று பா.ஜனதா வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பகல் 12.35 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர், அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஆதரவாக வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

Share this post with your friends